"கடந்த  2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள்  இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப்  புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள  அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ்  காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர்  குரலெழுப்பியுள்ளார். 
குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்"  என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான  அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும்  நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர்  அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை  என்னவென்பது?
சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.
கேரளத்  தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள்  தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த  திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு  பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப்  படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய  தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே  ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி  அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப்  புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக்  கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார்.
"முஸ்லிம்கள்  கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி  வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை  இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.
  | 
குஜராத்  காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி -  மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட  இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர்  2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல்  இயக்குனராகப்  பணியாற்றினார்.
குஜராத்தில்  புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து  வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான  வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம்  சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து,  வேண்டுமென்றே வழக்கை  நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்  ஸ்ரீகுமார்.
அவர்  தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும்  ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா  போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக்  கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.
"இங்கு  இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப்  படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின்  இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.  மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக  உள்ளது என்பதாலும் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று  ஸ்ரீகுமார் கூறினார்.
மேலும்,  "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத்  தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது  சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல  கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர்  எச்சரித்தார்.
மதக்  கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல்  உச்சநீதி மன்றத்தின் உத்தரவு  மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு  (SIT) அமைக்கப்பட்டது.
குஜராத்  கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற  உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார்  மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப்  புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.
ஸ்ரீகுமார்  தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில்  பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள  காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக்  குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ  அவர்  அழைக்கப்படவில்லை.
மோடி  உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு  (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல்  ஆக்கிவிட்டது.
தான்  வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை,  ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87  பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம்  என்றும் ஸ்ரீகுமார் கூறினார்
"திருமதி  ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப்  பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே  முயன்று வருகின்றனர்" என்றும்
"உச்சநீதி  மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப்  புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு  துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குஜராத்  கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப்  பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம்  கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட  விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய  முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால்  போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார்.
தான்  பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப்  பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு  எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.
சரித்திரத்தில்  முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian  Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும்  படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம்  தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று  தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள்  ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
"மிகவும்  கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன  தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை  ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித்  நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு  சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.
உண்மையைப்  புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக  ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில்,  இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப்  படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும்  இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால்  அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி  முடித்தார் ஸ்ரீகுமார்.
மூலம் : கல்ஃப் டுடே

0 comments:
Post a Comment