ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.
மாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.
சில்க் சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. ''இது ஒர் இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.
ஏப்ரல், ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தி முடித்தது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி. மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதி முடித்தன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு)பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கிள் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாரூக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.
இந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டு-வெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.
அணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திர சிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கிள் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்தத் தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு ''ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். ''இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில 'வீரர்கள்' மட்டும், ''எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம், இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் 'தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, 'மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர ''தீக்கதிர்'' நாளேடு.
ஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள், கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவை விட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல் மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட அசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டு-வெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்தக் கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்க-ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் 'தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்-சூதாட்டமாகவும், வியாபாரம்-விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பணக் கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாசக் களி வெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப் பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும்.
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்ட சகோதரன் தன்னுடைய பொன்னான நேரத்தை இதில் போக்குவது வேதனையான ஒன்று. கிரிக்கெட் எப்பொழுது சூதாடிகளின் கூடாரமாக மாறியதோ அன்றே ஒரு முஸ்லிம் அதை விட்டு விலகிவிட வேண்டும். காரணம், இஸ்லாம் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளது.
0 comments:
Post a Comment