”பிர் அவ்னின் பரம்பரைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்”  என்று எக்காளமிட்ட ஹோஸ்னி முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வதிகார ஆட்சி  அவரே எதிர்பார்க்க முடியா அளவு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.  அமெரிக்காவின் நலனுக்காகவும் இஸ்ரேலின் நலனுக்காகவுமே தன் நாட்டு மக்களை  கூட கொடுமைப்படுத்திய முபாரக் கடைசியில் வேறு வழியின்றி அமெரிக்காவாலேயே கை  கழுவி விடப்பட்டதற்கு பரிதாப்பட கூட யாருமில்லை. 
துனிஷியாவில்  புரட்சி வெடித்த போதே சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான  அல்-வதான்  தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை  போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை  புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை  அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு  தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர  வேண்டும் என்று எழுதியதை படித்தாவது முபாரக் திருந்த முயற்சித்திருக்க  வேண்டும்.
ஆனால் முபாரக் முந்திய பிர் அவ்ன்களின் வழிமுறையை பின்பற்றுவதில் தான் உறுதியாய் இருந்தார். எகிப்தின் முதல் நவீன பிர் அவ்னான ஜமால் அப்துல் நாசர்  அரபுலகின் ஹீரோவாக கருதப்பட்டாலும் இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக மாற்ற  நினைத்த இஸ்லாமிய வாதிகளை வேட்டையாடி சித்திரவதை செய்தார். அதை தொடர்ந்து அன்வர் சதாத்தும் அவர்களின் வழியில் முபாரக்கும்  இஸ்லாமியவாதிகளை கொடுமைப்படுத்தினர்.  ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாய்  இருந்த மன்னர்களை விரட்டியடித்து முஸ்லீம் தேசம் இறை கட்டளை படி வழி  நடத்தப்பட வேண்டும் என்று வெறும் 6 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்வானுல் முஸ்லீமின் தொடக்கத்தை பூண்டோடு நசுக்க நினைத்தவர். அல்லாஹ் எமது இறைவன், முஹம்மது எமது தூதர், திருகுரான் எமது சாசனம், போராட்டம் எமது பாதை, வீரமரணம் எமது வேட்கை எனும் முழக்கத்துடன் இறையாட்சிக்கு பாடுபட்ட அவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷஹீதாக்கினார்கள். 
ஏன்  புத்தகங்களை எழுதுவதில்லை என்று ஒரு தடவை ஷஹீத் ஹசன் அல் பன்னாவிடம் கேட்ட  போது அவர் சொன்னார் “ நான் மனிதர்களை எழுதுகிறேன். ” என்றார். ஆம் அவர்  எழுதிய மனிதர்கள் ஏகாதிபத்தியங்கள் நடுங்கும் புத்தகங்களை எழுதியது  மாத்திரமல்ல, மீண்டும் இவ்வுலகில் சத்திய சஹாபாக்களை நினைவுபடுத்தும் அளவு  இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யவும் துணிந்தார்கள். நாசர் தன் ஆட்சி  காலத்தில் 1954 ல் ஒட்டு மொத்த இஹ்வான்களையும் கூண்டோடு சிறை பிடித்தார் .  சிறைச்சாலைகளில் கொடுமையோடு  தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க  வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு  உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில்  தான் சையது குதுபை விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருகிறோம், அதை மறுத்து  விட்டு சொன்னார்கள் “என்னை  இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும்.  தனிமை சிறையில்  அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு  கடத்தினால் அது ஹிஜ்ரத்" என்று முழங்கினார்கள். தலைமை  நீதிபதியாக இருந்த அப்துல் காதர் அவ்தா இஸ்லாத்துக்கு முரணான மனித  சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதை தன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.  பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி சிறையில் சித்ரவதை  செய்யப்பட்டார்கள்.  
அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து தான் உலக புகழ் பெற்ற திருக்குரான் விளக்கவுரையான பீ லீலாலில் குரான் (திருக்குரானின் நிழலிலே) புத்தகத்தை சையது குதுப் எழுதினார்கள். ஜைனப் கஜ்ஜாலியின் “ என் வாழ்வின் மறவா நினைவுகளும்” உலகையையே உலுக்கிய குதுபின் “மைல் கற்கள்”  உள்ளிட்ட புத்தகங்கள் வெளியாயின. உஸ்தாத் செய்யித் குதுப், யூஸுப்  ஹவ்வாஷ், அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து  நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில்  முழங்கினார்கள் “ கபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து  விட்டேன்”. இவை அனைத்தும் ”அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” என்று இறைவன் சூரத்துல் புரூஜில் குறிப்பிடும் படியே நடந்தது.
30  வருட கால ஆட்சியில் முபாரக்கிற்கு அமெரிக்கா கொடுத்த முக்கிய வேலையே  இஸ்லாத்தை ஆளுவதிலிருந்து தடுப்பது. அது அவ்வளவு எளிதானது அல்ல.  அல் –  அஸ்ஹர் விருட்சமாய் இருந்த இடத்தில், இமாம் ஹசன் அல் பன்னாவும் ஷஹீத்  செய்யத் குதுப்பும் விதைகளை விதைத்த மண்ணில்,  பிர் அவ்னிடத்தில் மூஸா  (அலை) இகாமத் தீனை பேசிய இடத்தில் அது எளிதான காரியமாக இருந்ததில்லை  முபாரக்குக்கு. மேலும் முபாரக் ஆட்சிக்கு வந்த பிறகு எகிப்து மக்களை விட  அமெரிக்க மக்களை திருப்திபடுத்துவதில் தான் முனைப்பாக இருந்தார்.
ஒபாமா  ஆட்சிக்கு வந்த பிறகு ஒபாமாவின் அரசாங்கம் குறித்து “முந்தைய அரசின்  பார்வையில் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக கருதினார்கள். ஆனால் ஒபாமா  முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக எந்நடவடிக்கையும் எடுக்க  மாட்டார். நம் மேல் கரிசனையாக இருக்கிறார்” என்றார். பதிலுக்கு பிபிசிக்கு  அளித்த நேர்காணலில் ஒபாமா“ முபாரக் அமெரிக்காவின் வலுவான ஆதரவாளர்.  மத்தியகிழக்கின் ஸ்திரதன்மைக்கும் அப்பகுதியின் நன்மைக்கும் முபாரக்  அவசியம்”.  எக்கானமிஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமிய  தீவிரவாதம் கேன்சர் போன்றது அது அழிக்கப்பட வேண்டும் என்றும் தான்  ஜனாதிபதியாக இருக்கும் வரையில் மதமும் அரசியலும் ஒன்று சேராது என்றும் கொக்கரித்தார்.
முபாரக்கின்  இன்னொரு பணி இஸ்ரேலை பாதுகாப்பது. 1981 ல் முபாரக் பதவியேற்றவுடன் செய்த  முதல் காரியம் சதாத்தின் அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். லெபனானை  ஆக்கிரமிக்க சென்ற இஸ்ரேலிய போர் வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில்  இறந்ததற்கு அனுதாபம் தெரிவித்தார் முபாரக். எகிப்து – இஸ்ரேல் ஒப்பந்தத்தை  ஹூதைபியா உடன்படிக்கையுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துமாறு அல் – அஸார்  பல்கலைகழக உலமாக்கள்  நிர்பந்திக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 25 காஸாவின்  மேல் விமான தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்கள் முன் இஸ்ரேல் வெளியுறவு  மந்திரி டிஜிப்பி லிவினி கெய்ரோ வந்து முபாரக்கை சந்தித்து விட்டு சென்றது  குறிப்பிடத்தக்கது. காஸாவின் மீது இஸ்ரேல் பொருளாதார தடை போட்ட போது இரண்டு  நாட்கள் முன் தான் காஸாவின் சில மைல்கள் தொலைவில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில்  முபாரக்கை புஷ் சந்தித்து விட்டு எகிப்து மற்றும் காஸாவின் எல்லையை  வலுப்படுத்த சொன்னார்.
காஸாவில்  பெண்களின், குழந்தைகளின் அழுகுரலுக்கு முபாரக்கின் பதில் என்னவாக இருந்தது  தெரியுமா? எல்லையை திறப்பதற்கு பதில் , மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு  பதில் தன் படைகளை எல்லைக்கு அனுப்பி உணவை கடத்தாமல் இருக்க செய்தார்.  காஸாவில் உள்ள மக்கள் தடையை உடைத்து எகிப்து உள் நுழைந்த போது நாய்கள்  மற்றும் தடிகளை வைத்து பெண்களையும் குழந்தைகளையும் அடித்து விரட்டினார்.  இதே தஹ்ரிர் சதுக்கத்தில் பலஸ்தீன் மக்களுக்காக போராடிய மக்களை அடித்து  விரட்டி கைது செய்தனர். இஸ்ரேலின் போலீஸ் மந்திரி மோஷே ஷால் கெய்ரோவில்  காஸா- ஜெரிக்கோ ஒப்பந்தம் 1994 ல் போடப்பட்ட போது சொன்னார் “ இது  ஜியோனிஸத்தின் வெற்றி. பல வருடங்களாக அங்கீகாரம் இல்லாமல் இறுதியாக  கிடைத்து விட்டது. நிறைய செலவு செய்து போர்கள் பல செய்து இப்போது அப்பலனை  அடைந்து விட்டோம்.  எப்பெயரை  முஸ்லீம் நாடுகள் உச்சரிக்க தயங்கினதோ அதை  இப்போது அங்கீகாரம் செய்துள்ளன. அது போல் 30 அக்டோபர் 2008ல்  இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமான் பெரஸ் “ முபாரக்கின் மீது மிக உயர்ந்த மதிப்பு  வைத்துள்ளோம். மத்திய கிழக்கின் அமைதிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு  கணம் கூட அமைதியை நிலைநாட்டுவதிலிருந்து பின் வாங்கவில்லை” என்று  பாராட்டினார்.
இனியாவது  முஸ்லீம் நாடுகள் மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல்  இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு  நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே  தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய்  விளங்கலாம்.  இல்லையென்றால் திருமறை கூறுகின்ற படி இவர்கள்  அப்புறப்படுத்தப்பட்டு இவர்களை விட சிறந்த சமூகத்தை கொண்டு அல்லாஹ்  இறையாட்சியை நிலைநாட்டுவான். 

0 comments:
Post a Comment