பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ் அல்குர்ஆனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை தெளிவுபடுத்தியுள்ளதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். வருடத்தின் முதல் மாதமாக புனித முஹர்ரம் மாதம் இருப்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
எனினும், ஒவ்வொரு மாதமும் முதல் நாளை ஆரம்பிப்பதில் முஸ்லீம்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக சர்ச்சை இருந்தே வருகிறது என்பதை நம்மில் யாரும் மாற்றுக்கருத்து கொள்ள முடியாது.
எனவே இம்முறை 1432 ஹிஜ்ரி எவ்வாறு ஆரம்பமாகிறது என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம். உலகில் முஸ்லீம்கள் பலவாறு சிந்தித்து முக்கியமாக ரமளான் மாதத்தையும், ஷவ்வால் மாதத்தையும், மற்றும் துல்ஹிஜ்ஜா மாதத்தையும் ஆரம்பிக்க முயற்சி செய்கின்றனர். மற்ற மாதங்களை பற்றி யாரும் கண்டுகொள்வதே கிடையாது என்பதையும் நாம் மறுக்க முடியாத உண்மை.
ஏகத்துவ சிந்தனையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த கால கட்டத்தில் சுன்னத் என்றால் அது உலகில் அனைத்து இடங்களிலும் ஒன்றாக இருக்கும். பித்அத் என்றால் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறி வந்தது நம்மில் பலருக்கு நினைவில் இருக்கும் என்று கருதுகிறேன். எனினும் நபிவழி எனது பாதை என முழக்கமிட்டவர்கள் பிறை விஷயத்தில் ஆளுக்கொரு கருத்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். முற்காலத்தில் உள்ள மக்களும் அப்படியே இருந்தனர்.
மாத துவக்கத்தை எப்படி முடிவு செய்வது என்பதை பற்றி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஸ்லிம் உம்மதிற்கு வழி காட்டவில்லையோ என உலக மக்கள் நினைக்கும் அளவிற்கு முஸ்லிம்கள் மாத ஆரம்பத்தை சரியான கிழமையில் துவக்க முடியாமல் திணறிவருவதை உலகமே வேடிக்கை பார்த்து சிரித்து வருகிறது என்பதையும் நம்மில் அனைவரும் அறிந்தே உள்ளோம்.
இவ்விஷயத்தில் முஸ்லீம்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதை திட்டமிட்டு வழி கெடுக்க யூத நஸராக்களின் சதி தீ்ட்டப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ஒரு குழப்பமான சூழ்நிலை பிறை விஷயத்தில் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களை மாதத்தை சரியான நாளில் துவக்கிவிடக் கூடாது என்பதற்காக வழிகெடுக்க எந்தளவு அன்னிய சக்திகள் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்தியுள்ளது என்பதை இது சம்மந்தமான ஆய்வில் நாம் இறங்கியதால் ஓரளவு புரிந்து கொள்ளமுடிந்தது.
பிறை விஷயத்தில் தற்போது வாழ்பவர்களும், முன் வாழ்ந்து சென்ற சமுதாயங்களும் சிந்தித்து எத்தனையோ வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருந்தாலும் கீ்ழ்வறும் மூன்று அம்சங்களுக்குள் அந்த வழிமுறைகள் அடங்கிவிடும்.
· கண்ணால் பார்த்து எல்லையை சுயமாகவே வகுத்து செயல்படுவது (முதல் சாரார்)
· கண்ணால் பார்த்த தகவலை பெற்று எல்லையை வகுக்காமல் செயல்படுவது (இரண்டாம் சாரார்)
· பிறைகளை துல்லியமாக கணக்கிட்டு செயல்படுவது (மூன்றாம் சாரார்)
மூன்று சாரார்களில், முதல் இரண்டு சாரார்களால் பின்பற்றப்படும் கண்ணால் பார்த்து செயல்படவேண்டும் என்ற சாராரும், கண்ணால் பார்த்த தகவலை பெற்று செயல்படவேண்டும் என்ற சாராரும், இது வரை ஒரு தெளிவான அளவுகோலை பிறை விஷயத்தில் மக்கள் மன்றத்தில் வைக்கவில்லை.
எனவே தான் கணக்கிட்டு செயல்படுவது என்ற கருத்து இன்று உலகில் மேலோங்கியது. மேலும் கண்ணால் பார்க்க வேண்டும் என்று கூறுபவர்களும், தகவலை பெற்று நடைமுறைப்படுத்தலாம் என்று கூறுபவர்களும் அவர்களை அறியாமலேயே கணக்கீட்டு முறைகளுக்குள் நுழைந்துவிட்டார்கள். எனினும் - கணக்கிடுவது – என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் - கணிப்பு – என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை அறியாமல் செயல்படுத்தி வருகிறார்கள்.
உதாரணமாக ஒருவர் நான் இன்று பிறை பார்த்தேன் என்று கூறினால் முதல் சாராரும், இரண்டாம் சாராரும் இன்று பிறை தெரியாத நாள், அல்லது இன்று இத்தனை நிமிடம் தான் வானில் பிறை சூரிய அஸ்தமனத்திற்கு பின் இருக்கும். இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் கழிந்தால்தான் அதை நாம் பார்க்க முடியும் என்று விளக்கம் கொடுப்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். இதில் எதையும் நபிகளார் பிறை பார்த்து வந்த மக்களிடத்தில் சொல்லவே இல்லை. அவர்கள் அதை கற்றுத்தரவும் இல்லை.
எனவே கணக்கீட்டு முறைகளை அனைவரும் அவர்களை அறியாமலேயே ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதை யாராவது மறுத்தால், அவர்கள் அல்லாஹ்விற்கு உண்மையாக பயந்து கொள்ளட்டும். எனவே கணக்கீட்டு முறையை அவர்கள் எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், உண்மையில் அவர்களை அறியாமலேயே கணக்கீட்டு முறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
எனவே தற்போது சந்திர நாட்காட்டி கணக்கீட்டு முறைகளின் அடிப்படையில் எந்த சாரார் 1432 ஹிஜ்ரி ஆண்டை சரியாக துவக்குகிறார்கள் என்பதைபற்றி ஒரு ஆய்வறிக்கை இந்த கட்டுரை மூலம் வெளியிடப்படுகிறது.
முஹர்ரம் துவக்கம் சரியா? என்பதை அறிய நாம் ஹிஜ்ரி 1431 துல்ஹஜ் மாதம் துவங்கப்பட்ட நாள் எப்போது என்பதை கணக்கிட்டு வந்தால் தான், நமது மாத துவக்க நாளின் கணக்கு சரியா தவறா? என்பது புரியவரும். ஏன் என்றால் ரமளானுக்காக நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை கணக்கிட்டு வருவார்கள் என்ற நபிமொழியை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறோம். அந்நபிமொழியின் அடிப்படையில் ஒரு மாதத்தை சரியாக துவக்க, முந்திய மாதத்தை சரியாக கணக்கிட்டால் தான் முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
· 1 துல் ஹிஜ்ஜா 1431 Sunday / ஞாயிற்றுக்கிழமை(07.11.2010) கணக்கிட்டு செயல்படுத்தியவர்கள்
· 1 துல் ஹிஜ்ஜா 1431 Monday / திங்கள் கிழமை ( 08.11.2010 ) எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள்
· 1 துல் ஹிஜ்ஜா 1431 Tuesday / செவ்வாய்கிழமை ( 09.11.2010 ) கண்ணால் பார்த்து தாம் நிர்ணயித்த பகுதியில் செயல்படுத்தியவர்கள்.
இந்த மூன்று சாரார்களுக்கும் துல்ஹஜ் மாதம் எவ்வாறு முடிவடையும் என்பதை அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
1. 29 துல் ஹிஜ்ஜா 1431 Sunday / ஞாயிற்றுகிழமை ( 05.12.2010 ) கணக்கிட்டு செயல்படுத்தியவர்கள்
2. 29 துல் ஹிஜ்ஜா 1431 Monday / திங்கள்கிழமை ( 06.12.2010 ) எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள்.
3. 29 துல் ஹிஜ்ஜா 1431 Tuesday / செவ்வாய்கிழமை ( 07.12.2010 ) கண்ணால் பார்த்து தாம் நிர்ணயித்த பகுதியில் செயல்படுத்தியவர்கள்.
கணக்கிட்டு செயல்படுத்தியவர்கள் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தின் 29 வது நாளை ஞாயிற்றுகிழமை (5.12.2010) அடைந்து விட்டார்கள். பிறை கணக்கிட்டு வந்ததின் அடிப்படையில் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தில் மொத்தம் 28 பிறைகளை கண்களாலும் பார்த்து கணக்கிட்டு எண்ணிக்கொள்ள முடிந்தது.
1431 துல்ஹிஜ்ஜாவுடைய முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை (7.11.2010) முதல் மன்ஸிலுக்கான பிறை இருந்தது. அதிலிருந்து பிறையை மூன்றாம் சாரார் எண்ணி கணக்கிட்டு வந்தார்கள்.
மூன்றாம் சாரார் கருத்தின் அடிப்படையில், கணக்கிடும் மன்ஸில் உலகில் எங்கெல்லாம் கண்களுக்கு தெரிந்தது எவ்வளவு நேரம் தெரிந்தது என்பதை கீழ்கண்ட இணைய தளங்களில் இருந்து தருகின்றோம்.
இத்தளம் இரண்டாம் சாரார்களின் அடிப்படையில் உலகில் எங்கிருந்தும் பிறை பார்த்த தகவலை ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களின் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தகவல்களுக்காக இதை இந்த தளத்தை உங்களுக்கு தருகிறோம்.
மேலும் 1431 துல்ஹிஜ்ஜா 28 வது நாளான சனிக்கிழமை (4.12.2010) அன்று அல்லாஹ் திருமறையில் 36:39 என்ற வசனத்தில் கூறும் உர்ஜூனில் கதீம் (உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் பழ பாளை) என்ற கடைசி மன்ஸில் இருந்தது.
அதற்கு அடுத்த 1431 துல்ஹிஜ்ஜா 29 வது நாளான ஞாயிற்றுக்கிழமை (5.12.2010) பிறைக்கான மன்ஸில் உலகில் எங்குமே தெரியவில்லை மேலும் தெரியாது. ஏன்என்றால் அதற்கு முன்தினம் சனிக்கிழமை (4.12.2010) அன்று அதன் கடைசி மன்ஸிலான உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் பழ பாளையை (உர்ஜூனில் கதீம் ) போல் ஆகிவிட்டிருந்ததை அறிய முடிந்தது.
மாதம் 30 நாட்களை கொண்டதாக இருந்தால் கண்களால் 29 மன்ஸில்களை நாம் பார்த்து கணக்கிட முடியும். மாதம் 29 நாட்களை கொண்டதாக இருந்தால் 28 மன்ஸில்களை மட்டுமே நாம் கண்களால் பார்த்து கணக்கிட்டு எண்ண முடியும். ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் பிறை கண்களால் பார்க்க முடியாத - கும்ம – உடைய நாளாகவே இருந்து வரும் என்பதை நபி (ஸல்) நமக்கு விளக்கியுள்ளார்கள்.
எனவே ஞாயிற்றுக்கிழமை (5.12.2010) அன்று 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தின் இறுதி நாள் என்பது துல்லியமாக தெளிவாகிவிட்டது. இன்றைய தினம் சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வந்து சந்திரன் புதிய மாதத்திற்கான சுற்றை ஆரம்பிக்கின்றது என்பதை அறிவியல் பூர்வமாக நம்மால் அறிய முடிகிறது. இதை இரண்டாம் சாரார்கள் ஒப்புக்கொண்ட இணையத்தளத்தில் இருந்து அதற்கான ஆதாரத்தையும் பதிந்திருக்கிறோம்.
The Astronomical New Moon is on December 5, 2010 (Sunday) at 17:36 UT. On Dec 5 it can not be seen anywhere in the world. On Monday, December 6, 2010, it can be easily seen in Africa and Americas, but with difficulty in Western Australia, and South East Asia. On Tuesday, December 7, 2010, it can be easily seen in Europe (See visibility curves). http://www.moonsighting.com/1432muh.html
எனவே ஞாயிற்றுக்கிழமை ( 5.12.2010) அன்று உலகில் பிறை எங்குமே தென்படாத நாளாக உள்ளது. இதை ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் கும்மா உடைய நாள் என கூறுகின்றார்கள். இந்த பிறைதெரியாத கும்மா உடைய 29 வது நாளை, சந்திர மாதத்தை கணக்கிட்டு ஆரம்பிப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்டுத்தான் சென்றுள்ளதாக மூன்றாம் சாரார் தங்கள் கருத்தாக தெரிவிக்கிறார்கள்.
அதை பார்த்து நோன்பு வையுங்கள், அதை பார்த்து விடுங்கள் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அது உங்களுக்கு மறைக்கப்படும் போது அதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் பிறை மறைக்கப்பட கூடிய ஒரு நாள் உள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மேலும் தெளிவுபடுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ். ஏன் என்றால் அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் -மறைக்கபட்டால்- என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதை -மறைக்கப்படும் பொழுது - என்ற மொழிபெயர்ப்புதான் சரி என மூன்றாம் சாரார்கள் கருதுகிறார்கள்.
ஏன்என்றால் திருக்குர்ஆன் சந்திரனின் மன்ஸில்களை கணக்கிட்டு பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று 10:5 வசனத்தில் கூறுவதை அனைவரும் அறிந்தே. அந்த அடிப்படையில் ஆய்வு செய்யும் போதும், மற்றும் மூன்றாம் சாரார் கூறும் அடிப்படையில் தொடர்ந்து சந்திர மன்ஸில்களை கண்ணால் பார்த்து கணக்கிட்டு வரும் போதும் மாதத்தின் ஒரு நாள் மட்டும் தான் பிறை மன்ஸில் கண்களால் பார்க்க முடியாத நிலை தொடர்ந்து ஏற்படுகிறது.
எனவே நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக விளக்கம் கொடுத்திருக்க முடியாது என்பதை அனைவரும் அறிந்ததே! எனவே -தற்போது பிறை ஹதீஸ்களை மொழிபெயர்க்கும் போது உங்களுக்கு மேக மூட்டமாக இருக்கும் போது - என்று கூறுவதை திருக்குர்ஆனின் 10:71 வசனம் மூலம் மூன்றாம் சாரார் மறுப்பதோடு, பிறை தெரியாத அந்த -கும்மா - உடைய நாளில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்றுதான் விளங்க முடியும். 10:71 வசனத்தில் இதே - கும்மா - என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதை மூன்றாம் சாரார் கூறுவதை காணமுடியும்.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ وَشُرَكَاءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوا إِلَيَّ وَلَا تُنْظِرُونِ
மேலும் மூன்றாம் சாரார் குறிப்பிடுவது போல், நபி(ஸல்) அவர்கள் 29 நாட்கள் உடைய மாதங்களை பற்றி குறிப்பிடும் போது கணக்கிட்டு கொள்ளுமாறும், 30 நாட்கள் உடைய மாதங்களை பற்றி குறிப்பிடும் போது எண்ணிக்கொள்ளுமாறும் கூறியுள்ளதை கருத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
ஏன் என்றால் மாதம் என்பது 29 நாள்களும் இருக்கும் சில சமயம் 30 நாட்களும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதங்களை பற்றிய செய்திகளையும் நமக்கு அறிவித்திருப்பார்களா? அல்லது மாதம் 29ல் மாதம் முடிவதை மட்டும் அறிவித்திருப்பார்களா? என்ற மூன்றாம் சாரார் கருத்தை சிந்தித்தால் பல உண்மைகள் விளங்க வரும்.
1 முதல் 28 நாட்களை கொண்ட துல் ஹிஜ்ஜா மாதத்தில், பிறை தெரியாத 29 வது நாளான கும்மா உடைய நாளை மூன்றாம் சாரார் எண்ணி சேர்த்து கணக்கிட்டு 29 நாட்களாக துல்ஹிஜ்ஜா 1431 வருடத்தை (இன்றுடன்) ஞாயிற்றுக்கிழமையுடன் (5-12-2010) முடிவுக்கு கொண்டுவருகின்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறியபடி 1 லிருந்து 28 வரை பிறையை பார்த்து பிறை தெரியாத 29வது நாளை 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தில் சேர்த்து எண்ணி கணக்கிட்டு மாதத்தை தெளிவான அடிப்படையில் முடித்தால், புனித மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஒரு நாளை கூட முன்னும் பின்னும் ஆக்காமல் சரியாக அப்புனித மாதத்தை முடிக்க முடியும்.
எனவே மூன்றாம் சாரார்களான கணக்கிட்டு செயல்படுபவர்கள் ஹிஜ்ரி 1432 வருடத்தின் புனித மாதமான முஹர்ரம் மாதத்தை முன்னும் பின்னும் ஆக்காமல் சரியான தினத்தில் திங்கள்கிழமை (06-12-2010) அன்று ஆரம்பிக்கின்றார்கள் என்பதை அவர்கள் கருத்தாக பார்க்க முடிகிறது.
எனவே கணக்கிட்டு துவங்கிய மூன்றாம் சாரார்கள் 29 நாட்களுடன் 1431 வருடத்தின் துல்ஹிஜ்ஜா மாதத்தை நிறைவு செய்துவிட்டு 1432 வருடத்தை திங்கள்கிழமை (06-12-2010) அன்று (நாளை) ஆரம்பிக்கின்றார்கள்.
2ம் சாராரின் நிலையை தற்போது ஆய்வு செய்வோம்.
கண்ணால் பார்த்த தகவலை பெற்று எல்லை வகுக்காமல் செயல்படுவது என்ற கூறுபவர்கள் 1431 துல்ஹிஜ்ஜா மாத்த்தை திங்கள்கிழமை (8-11-2010) ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் பிறை கண்ணிற்கு தெரிந்தது. எனவே அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமைதான் எங்களுக்கு 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் என கூறுகின்றார்கள்.
எனவே இரண்டாம் சாரார் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே கண்ணால் பிறையை பார்த்துத்தான் செயல்பட வேண்டும் என்று கூறும் இரண்டாம் சாரார்கள், கணக்கிட்டு செயல்படுவது என்ற கூறுபவர்கள் வைக்கும் குர்ஆன் வசனத்திற்கும், ஹதீஸ்களில் உள்ள மொழியாக்க பிரச்சினைகளுக்கும், பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள் என்பதை காண முடிகிறது.
'ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)
அதே நேரம் நபியவர்கள் அவர்கள் ரமளானுக்காக ஷஃபான் மாதத்தை கணக்கிட்டு வருவார்கள் என்ற ஹதீஸ் தெளிவாக உள்ளது. தற்போது இரண்டாம் சாரார் ரமளான் மாதப்பிறையைப் பார்த்துத்தான் ரமளானை முடிவு செய்யவேண்டும் என கூறி அவர்களின் கருத்துப்படி மஃரிப் நேரத்தில் நின்று கொண்டு பிறையை தேடி வருகிறார்கள். அந்த மஃரிப் நேரம் ஷஃபானுக்குரியதா? ரமளானுக்குரியதா? என்பதை இரண்டாம் சாரார் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் பிறையை 29வது நாளில் பார்க்க சொன்னார்களா? 30வது நாளில் பார்க்க சொன்னார்களா? அதற்கான நேரடி உத்திரவு எங்கே? என்ற கேள்விக்கும் இரண்டாம் சாரார் பதில் தர வேண்டியுள்ளது.
சட்டங்களை விளங்கி செய்வதில் என்ன தவறு என்று மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்தால், குர்ஆனையும், ஹதீஸையும் எந்தவித முரண்பாடும் இல்லாமல் விளங்கி செய்யும், மூன்றாம் சாராரை எக்காலத்திலும் தவறிழைக்கிறார்கள் என வாதிட முடியாது. முன்னோர்கள் விளங்கியது போல் தான் மூன்றாவது சாரார் விளங்கி சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இரண்டாவது சாரார்கள் வாதிட்டால் அது சரியா? என்ற கேள்விக்கும் அவர்கள் பதில் தர வேண்டியுள்ளது.
மேலும் சந்திரனை ஆய்வு செய்து அதன் மன்ஸில்களை கணக்கிட்டு பின்பற்றும் போது சந்திரன் எத்திசையில் நமக்கு உதிப்பது போன்று தோன்றும், எத்திசையில் மறைவது போன்று தோன்றும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளமுடியும் என்று மூன்றாவது சாரார் ஆய்வின் அடிப்படையில் கூறுகின்றார்கள்.
அறிவியல், விஞ்ஞானமே கூடாது என்று கூறும் முதல் இரு சாராரும், சிந்திக்காமல் நபியின் நேரடி கட்டளைகளை மட்டும் வைத்துத்தான் ஒவ்வொரு விசயத்தையும் விளங்க வேண்டும் என கூறுகின்றனர். அப்படிஎன்றால், பிறை எத்திசையில் தோன்றும்? எத்திசையில் மறையும்? என்பதைபற்றி நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த நேரடி ஆதாரத்தை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பொதுவாக பிறையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை பற்றி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஹதீஸ்களை இரண்டாம் சாரார்கள் மீள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளார்கள். மேலும் மூன்றாம் சாரார் கணக்கிட்டு செயல்படுவது என்ற தீர்வை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல முடிந்ததற்கான காரணமே இரண்டாவது சாரார்களிடம் மேற்கூறப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில் இல்லாதது தான்.
29வது நாள் நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையை விட்டுவிட்டு யாரையாவது பிறையை பார்க்கும்படி கட்டளையிட்டார்களா? என்ற கேள்விக்கும் அவர்கள் பதில் தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எனவே எந்த உத்தரவும் இல்லாமல் நாமாகவே மஃரிப் நேரத்தில் தொழுகையை பிற்படுத்தி பிறை பார்ப்பது நபிகளார் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் நுழைப்பது நூதனமாகும். அவை அனைத்தும் வழி கேடு. வழிகேடு நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நபிமொழி இரண்டாவது சாராரை கட்டுப்படுத்தாதா? என்ற மூன்றாம் சாராரின் கேள்விக்கு பதில் தரவேண்டிய நிலையில் உள்ளனர்.
நாம் ஹதீஸ்களில் இருந்து புரிந்து கொண்டு செயல்படுவது தவறு இல்லை என இரண்டாம் சாரார் வாதிட்டால் அதே போல் மூன்றாம் சாராரார்களும் குர்ஆன் `ஹதீஸ்களை புரிந்து கொண்டு கணக்கிட்டு செயல்படுவதை எப்படி தடுக்க முடியும். கணக்கிட்டு செயல்படுவதை நபிகளார் எப்போதாவது தடைவிதித்துவிட்டு சென்றார்களா? என்பதையும் இரண்டாம் சாரார்கள், மூன்றாம் சாராரார்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் எந்த எல்லையும் கிடையாது பிறைபார்த்த தகவலை உலகில் எல்லாபகுதியினரையும் கட்டுப்படுத்தும் என கூறுகின்றனர். மூன்றாம் சாராரார் உலகில் இரண்டு கிழமைகள், இரண்டு தேதிகள் இருந்து கொண்டே இருக்கும். எனவே பிறை தேதியை அறிவிக்கும் போது யார் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இரண்டாம் சாரார் தெளிவுபடுத்த கடமைப்பட்டுளார்கள். வியாழக்கிழமையில் பிறை பார்த்து தகவலை புதன்கிழமையில் உள்ளவர்களுக்கு சொன்னால் அது அவர்களை கட்டுப்படுத்துமா?
மேலும் 2ம் சாரார்கள் அவர்கள் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தை துவக்கிய நாளான திங்கள் கிழமைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையின் பிறை வடிவத்தை கண்ணால் பார்த்தாலே நமது பெண்களே கூறிவிடுவார்கள் இது இரண்டாம் பிறை என்று! அந்த அளவிற்கு பெரியதாகவும் நீண்ட நேரம் வானத்தில் இருந்ததையும் உங்களுக்கு கீழே தகவலுக்காக கொடுக்கப்பட்ட இணையத்தளத்தில் காணலாம்.
இரண்டாவது சாரார்கள் ஞாயிற்றுக்கிழமை (7.11.2010) பார்த்த பிறை எந்த நாளுக்குரிய மன்ஸில் என்பதை அன்றைய தினத்தின் பிறையை கண்ணால் பார்ப்பவர்கள், அந்த பிறை வானில் நம் கண்களுக்கு தெரிய ஆரம்பித்த நேரம், அந்த பிறையின் அளவு, அன்றைய தினம் சந்திரனுக்கு சூரியனுக்கும் உள்ள கோணஅளவு, போன்றவற்றை சிந்தித்தாலே எத்தனை நாள் தாமதமாக நாம் மாதத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இரண்டாம் சாரார்கள் ஞாயிற்றுக்கிழமை (7.11.2010) பார்த்த தகவலை அவர்கள் தரப்பு இணையத்தளத்திலிருந்தே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தகவலுக்காக மட்டும் அந்த இணையவிலாசம் இங்கு கொடுக்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட பிறையின் மன்ஸில்களை அறிந்ததின் மூலம் மூன்றாம் சாரார்களின் கருத்துப்படி இரண்டாம் சாரார் துல்ஹஜ் மாதத்தில் ஒரு நாளை இழந்துவிட்டார்கள் என கூறுவதற்கும் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
இரண்டாம் சாரார் 1431 ம் வருடத்து துல்ஹிஜ்ஜா மாதத்தை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்காமல் ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை ஆரம்பித்ததால், அவர்களுக்கு துல்ஹிஜ்ஜா வின் 29 வது நாள் திங்கள்கிழமை (6-12-2010) அன்றுதான் வரும். அதற்கு முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையுடன் மாதம் முடிந்து, திங்கள்கிழமை 1432 முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் தான் அவர்களும் இருக்கிறார்கள், என்றாலும் இரண்டாம் சாரார் துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஒரு நாளை தவறவிட்டுவிட்டு 28 நாட்களையே பெற்றார்கள். எனவே மு`ஹர்ரம் மாதத்தின் முதல் நாளை துல்`ஹிஜ்ஜாவின் 29 வது நாள் என கண்கிட வேண்டிய சூழ்நிலைக்கு இரண்டாம் சாரார் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் சாரார், துல்ஹிஜ்ஜாவின் ஒரு நாளை இழந்ததோடு, 1432 வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை சரியாக ஆரம்பிக்க முடியாமலும் ஆகிவிட்டது.
அந்த தினத்தில் மூன்றாம் சாராரின் கருத்துப்படி முதல் மன்ஸிலுக்கான பிறைதான் வானில் கண்ணால் பார்க்க முடிகின்ற அளவில் இருக்கும்.
மேலும் திங்கள்கிழமை (6-12-2010) உலகில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து பார்த்து கொண்டு செல்வோமானால் சென்னையில் 0:37 நிமிடங்கள் பிறையை புறக்கண்ணால் சூரிய மறைவிற்கு பின் பார்க்க முடியும். அதே திங்கள்கிழமை ராரோடோங்கா – குக் தீவு RAROTONGA-COOKISLANDS http://www.timeanddate.com/worldclock/astronomy.html?n=279&month=12&year=2010&obj=moon&afl=-11&day=1
என்ற பகுதி வரை சென்று பார்த்தோமானால் அங்கு சூரிய மறைவு 19:13 க்கு அதாவது மாலை 7:13 க்கு மறைகிறது. இதே திங்கள் கிழமையில் (6-12-2010) அங்கு சூரிய மறைவிற்கு பின் பிறையை 1 மணி 20 நிமிடங்கள் கண்ணால் பார்க்க முடியும்.
மூன்றாம் சாரார்களின் 29 நாளான ஞாயிற்றுக்கிழமை (5-12-2010) அன்று ராரோடோங்கா – குக் தீவு RAROTONGA-COOK ISLANDS என்ற அதே பகுதியில் சூரிய மறைவிற்கு பின் 25 நிமிடங்கள் பிறை இருப்பதை நீங்கள் அறிய முடியும். எனவே ஆங்கிலத்தில் ஊர் பெயர் குறிக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இணைப்பை கிளிக் செய்தால் சம்மந்தப்பட்ட இணையதள முகவரிக்கு செல்லும். அதில் நீங்கள் ஒவ்வொரு நாட்டின் ஊரின் சூரிய சந்திர உதயம் மறைவு நேரங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். இதிலிருந்து புது மாதத்தின் பிறை பிறந்துவிட்டது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
எனவே மூன்றாம் சாரார்கள் கணக்கிடும் போது பிறையே பிறக்கவில்லை , உலகில் எங்குமே பிறை இருக்காது என்று மக்களிடம் வேண்டும் என்றே தவறான தகவலை அளித்து வரும் முதல் சாராரும், இரண்டாவது சாராராரும், இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.
எனவே 2 வது சாராரார்கள் சென்னையிலேயே 37 நிமிடங்கள் பிறையை காணமுடியும் எனும் போது அது அவர்கள் கருத்துபடி அது முதல் பிறையாக இருக்குமா? என்பதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். அதுவும் திங்கள் கிழமையிலேயே ஒரு இடத்தில் 1 மணி 20 நிமிடங்கள் வரை பிறையை காணமுடியும் எனும் போது நிச்சயமாக மூன்றாவது சாரார் கூறுவது போல், ஒரு நாளை இரண்டாம் சாரார் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தில் இழந்து விட்டார்கள் என்பதை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியும்.
எனவே இரண்டாம் சாராரார்கள் நபி (ஸல்) அவர்களின் போதனைகள் குர்ஆனுக்கு என்றுமே எதிராக இருக்காது என்பதை புரிந்து, ஹிஜ்ரி 1432 முஹர்ரம் மாதத்தையாவது முன்னும் பின்னும் ஆக்காமல் திங்கள் கிழமையில் (6-12-2010) இருந்து ஆரம்பிக்க தங்கள் ஆதாரங்களை குர்ஆனுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்.
அடுத்ததாக
முதல் சாராரின் நிலையை ஆய்வு செய்வோம்
முதல் சாரார்களின் கருத்தான கண்ணால் பார்த்து எல்லையை சுயமாகவே வகுத்து செயல்படுவது என்ற நிலையை ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
இரண்டாவது சாராரிடம், மூன்றாவது சாரார் கேட்ட அதே கேள்விகளுக்கு முதல் சாராரும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
முக்கியமாக முதல் சாராராரும், தாமாகவே ஒரு பகுதியை வரையறுத்து அதில் பிறை தெரிந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறிய கட்டளை சம்மந்தப்பட்ட நபிமொழியை மக்கள் மன்றத்தில் வைக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
நாடு என்றோ, மாவட்டம் என்றோ, வட்டம் என்றோ பிரிந்து செயல்பட நபிவழியில் நேரடிக்கட்டளை என்ன? என்ற மூன்றாவது சாராரின் கேள்விக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்கள். புரிந்து செயல்படுவது தவறா? என முதல் சாரார்கள் கேட்டால் மூன்றாவது சாராரார்களும், இரண்டாவது சாரார்களும், அவர்கள் புரிந்தபடி செயல்படுவது எப்படி தவறு, என எதிர் பிரச்சாராம் செய்கிறீர்களே அது சரியான செயலா? என்பதை முதல் சாரார் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவர்கள் எந்த தினத்தில் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தை ஆரம்பித்தார்கள் என ஆய்வு செய்து பார்ப்போம்
1 துல் ஹிஜ்ஜா 1431 Tuesday ( 09.11.2010 ) கண்ணால் பார்த்து தாம் நிர்ணயித்த பகுதியில் செயல்படுத்தியவர்கள்.
இவர்கள் 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தை செவ்வாய் கிழமை (9-11-2010) அன்று துவங்கினார்கள். இவர்களுக்கு 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தின் 29 வது நாள் செவ்வாய்கிழமை ஆகும்.
இவர்களுடைய கருத்தின் அடிப்படையில் 1431 துல் ஹிஜ்ஜா 28 திங்கள்கிழமை (6-12-2010) ஆகும். முதல் சாரார்களே 1432 துல்ஹிஜ்ஜா மாதத்தின் இரண்டு நாட்களை தவறவிட்டார்கள் என்பதாக மூன்றாம் சாரார் ஆதாரத்தில் இருந்து விளங்க வருகிறது.
மூன்றாம் சாராரின் கணக்கின் அடிப்படையில், முதல் சாரார் 1432 வருட முஹர்ரம் மாதத்தின் முதல் இரண்டு நாட்களை, 1431வருட துல்ஹிஜ்ஜா மாதத்தில் கொண்டு நுழைத்து விடுகின்றனர்.
அவர்களுடைய 27வது நாளிலேயே ஒரு கோட்டில் சூரியன் சந்திரன் பூமி வந்து உலகின் பல பகுதிகளில் பிறை இருக்கிறது என்பதை நாம் மேல் சொன்ன ஊரின் சூரிய சந்திர அஸ்தமண கணக்கை பார்த்தாலே புரியவரும். அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களின் சிந்தனையை பொறுத்ததே!.
முதல் சாராரின் 27 வது நாளான ஞாயிற்றுக்கிழமை (5-12-2010) அன்று ராரோடோங்கா – குக் தீவு RAROTONGA-COOK ISLANDS என்ற அதே பகுதியில் சூரிய மறைவிற்கு பின் 25 நிமிடங்கள் பிறை இருப்பதை நீங்கள் அறிய முடியும்.
மேலும் முதல் சாராரின் 28 வது நாளான திங்கள்கிழமை (6.12.2010) சூரிய மறைவிற்கு பின் சென்னையில் 37 நிமிடங்கள் வானில் கண்ணிற்கு பிறை தெரியும் அளவிலேயே பிறை இருக்கும்.
எனவே முதல் சாரார் இரண்டு நாட்களை 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தில் இழந்து விட்டதுடன் அல்லாஹ் 9:37 லில் கூறிய படி மாதங்களை முன்னும் பின்னும் ஆக்கும் செயலையும் செய்தவர்களாக இருக்கின்றனர். எப்படிஎன்றால் அவர்கள் இழந்த துல்ஹிஜ்ஜாவின் இரண்டு புனித நாட்களை, 1432வருட புனித முஹர்ரம் மாதத்தில் கொண்டு சேர்க்கின்றனர். முதல் சாரார் 1432 வருட முஹர்ரம் மாதத்தின் முதல் இரண்டு நாட்களை, 1431வருட துல்ஹிஜ்ஜா மாதத்தில் கொண்டு நுழைத்து விடுகின்றனர்.
எனவே மூன்றாம் சாரார் கணக்கிடுவது போல் கணக்கிடாவிட்டால், இது போன்ற பிழைகள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் என்பதை மூன்றாம் சாராரின் கருத்தாக உள்ளது.
பிறையை மேகத்திற்குள் இருந்தாலும் அதே நாளின் அவர்கள் வகுத்த எல்லையின் மற்ற பகுதியிலும் அந்த பிறை இருக்கும். – கும்மா – என்றால் மேக மூட்டம் என்ற மொழிபெயர்ப்பு தவறானது என்பதை 10:71 வசனத்தின் மூலம் மூன்றாம் சாரார் வலியுறுத்தியதை முதல் சாரார் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
மேலும் அவர்கள் 28 வது நாளில் சென்னையில் தெரியும் 37 நிமிட பிறையை கண்டு என்ன செய்ய போகிறார்கள் என்பதையும் முதல் சாரார் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
28 வது நாளில் பிறையை பார்த்தால் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நபிகளாரின் கட்டளையை முதல் சாரார் தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
http://www.timeanddate.com/worldclock/astronomy.html?n=553&month=12&year=2010&obj=moon&afl=-11&day=1
முதல் சாராரின் பார்வை என்ற கருத்தின் அடிப்படையில் செவ்வாய்கிழமை (7.12.2010) முதல் சாராராருக்கு 1431 துல்ஹிஜ்ஜா மாதத்தின் 29 வது நாள். அன்றைய தினம் சென்னையில் சூரிய மறைவு மாலை 05:42 ஆகும். சந்திர மறைவு மாலை 7:15 ஆகும். எனவே அன்றைய தினம் பிறையை புறக்கண்களால் 1 மணிநேரம் 33 நிமிடங்கள் பார்க்க முடியும்.
எனவே முதல் சாரார்கள் இதற்கு முன் தத்தமது பகுதியில் என்ற நிலைபாட்டில் இருந்த போதும் 28 வது நாளின் சூரிய மறைவிற்கு பின் பிறையை பார்த்ததால், 28வது நாளிலேயே மாதத்தை முடித்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
எனவே தான் தாங்கள் புதிதாக வரையறுத்த பகுதிவரை பிறை தகவலை ஏற்றுக்கொள்ளலாம் என வேறு ஒரு புது நிலைபாட்டிற்கு வந்தார்கள். அந்த நிலைபாட்டிலும் தற்போது 27 நாட்களில் மாதம் முடிகிறது என்பதை அவர்கள் புரிந்தாலே தங்களுடைய நிலைபாடு எவ்வளவு தவறானது என்பதை அறிந்து கொள்ள முடியும் என மூன்றாவது சாரார்களின் கருத்துக்கும் முதல் சாரார்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.
எனவே முதல் சாரார்களும் இரண்டாவது சாரார்களும் தங்களுடைய கருத்தை மறு பரீசீலனை செய்து, குர்ஆனுடைய வசனங்களின் அடிப்படையில் நபிவழியை புரிந்தால், இது போன்ற சிக்கல்களை தீர்த்து தெளிவான ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை உலகிற்கு நாம் தரமுடியும் என்ற மூன்றாவது சாராரின் கருத்தை மதித்து, ஆய்வு செய்யும் படி மூன்றாவது சாரார் மேற்கண்ட இரு சாரார்களையும் கேட்டுக்கொள்கின்றார்கள்.
இன்ஷாஅல்லாஹ் வானம் தெளிவாக காணப்படும் வாய்ப்பு அல்லாஹ் ஏற்படுத்திதந்தால், முதல் இரு சாரார்களும் பிறையை வானில் பார்த்து அதை கணக்கிட்டு ஹிஜ்ரி 1432 முஹர்ரம் என்ற அல்லாஹ்வின் புனித மாதத்தை முன்பின் ஆக்காமல் சரியாக துவங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழை இருந்தாலும், மழையில்லாத பகுதிகளில் உள்ள மக்கள் பிறையை பார்த்து புகைப்படங்களோ, வீடியோ பதிவுகளையோ அனுப்பி வைத்தால் ஒட்டு மொத்த தமிழ்மக்கள் சிந்தனைக்கு அது வழிவகுக்கும் என்பதையும் மூன்றாம் தரப்பார்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
தமிழ்நாடு, இந்தியா.
0 comments:
Post a Comment