60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
டார்ஜிலிங் : மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் ஜல்பக்குரியைச் சேர்ந்தவன் விஸ்வகர்மா (27). வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இவன் தேயிலை எஸ்டேட் மற்றும் கட்டட வேலை செய்யும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்தான். இவனை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக பேசிய டார்ஜிலிங் காவல்துறை உயரதிகாரி டி.பி.சிங் சிலிகுரி, டார்ஜிலிங், குர்சோங் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத்திலும் மற்றும் வெளியிலும் கூலி வேலை பார்த்து வரும் ஏழை இளம் பெண்கள்தான் இவனது வலையில் சிக்கியவர்கள். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் வந்துள்ளதாகவும் அந்த பெண்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கூறுவான். பின் விடுமுறை முடிந்து, மீண்டும் வேலைக்கு போகும் முன் திருமணம் முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கூறி அந்த பெண்ணையும், அவளது பெற்றோரையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுவான்.
அதற்குப் பிறகு திருமணமான பெண்ணுடன் ஊருக்கு செல்வதாக கூறி கொல்கொத்தா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வான். அங்கு தனது உறவினர்கள் என கூறி சிலரை அறிமுகப்படுத்துவான். இதை அந்த ஏழைப் பெண்களும் நம்பிவிடுவார்கள். இதையடுத்து, அப் பெண்களை, உறவினர்கள் போல் நடித்த விபசார கும்பலிடம் 70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை விலைபேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவான். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளிப்பதில்லை.
அவனது மோசடிகள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங்கைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவனை கண்காணித்து வந்தோம். இறுதியில் விஸ்வகர்மா எங்களிடம் கையும் களவுமாக சிக்கினான். தொடர்ந்து நடந்த விசாரணையில் இதுபோல் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, விபசார கும்பலிடம் விற்றதை ஒப்புக் கொண்டான்.
இதனை தொடர்ந்து புனே நகரில் இருந்த விபசார கும்பலின் பிடியில் இருந்து எட்டு பெண்களை மீட்டோம். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம். என்று சிங் கூறினார். (Thanks to Inneram.com)
0 comments:
Post a Comment