கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தில் இன்ன குழந்தை (ஆண் / பெண்) வேண்டும் என்று துஆ கேட்கலாமா ? குழந்தை கரு தரிப்பதற்கு முன்னால் தான் துஅஹ் கேட்க வேண்டும் .குழந்தை கருத்தரித்த பின் இன்ன குழந்தை வேண்டும் என்று துஆ கேட்க கூடாது என்று சொல்கிறார்களே? இது சரியா? குரான் ஹதீஸ் அடிபடையில் விளக்கம் தரவும். இது சம்பந்தமாக துஆக்கள் இருந்தால் அனுப்பவும். வஸ்ஸலாம்
- hameetha sheik
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
துஆ - பிரார்த்தனை என்பது விரும்புவதை, ஆசைப்படுவதை, தேவையானதை அல்லாஹ்விடம் கேட்பதாகும். இஸ்லாம் அனுமதிக்காதவற்றைத் தவிர்த்து, ஆகுமானவற்றை அல்லாஹ்விடம் கேட்கலாம்!
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். 'அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 6338, 7454, முஸ்லிம் 5200, அஹ்மத்)
'இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 7477, முஸ்லிம் 5202, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)
''நான் பிரார்த்தித்தேன் ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 6340, முஸ்லிம் 5283, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)
அல்லாஹ்விடம் கேட்கும்போது கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற தோரணையில், இறைவா! நீ நாடினால் கொடு என்று கேட்காமல் உறுதியோடு வலியுறுத்திக் கேட்கவேண்டும். அதுபோல் பிரார்த்தனை செய்து பார்த்துவிட்டேன் என் வேண்டுதல் ஏற்கப்படவில்லை என்றும் சலிப்படையாமல் நம்பிக்கையுடன் இறைவனிடம் கோரிக்கையை வைத்திடவேண்டும். இதனால் அல்லாஹ்விடம் கேட்டது கிடைக்கலாம் அல்லது கேட்டதைவிடச் சிறந்தது கிடைக்கலாம். அல்லது பிரார்த்தனையின் பலன் மறுமையில் கிடைக்கலாம்.
குழந்தை வேண்டுவது!
மகப் பேறு ஒவ்வொரு மனிதரும் விரும்புவது. ஆண் குழந்தை உள்ளவருக்கு பெண் குழந்தை தேட்டமாக இருக்கும். பெண் குழந்தை உள்ளவருக்கு ஆண் குழந்தை தேட்டமாக இருக்கும். ஆண், பெண் இரு பாலினங்களிலும் குழந்தைகளை வழங்கும்போது அவை ''சுபச் செய்தி'' என்றே அல்லாஹ் கூறுகிறான். பார்க்க: அல்குர்ஆன் 3:38. 11:71. 19:7. 43:16,17 ஆகிய வசனங்கள்.
குழந்தை வேண்டுவோர் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கலாம். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என விரும்பும் குழந்தையையும் அல்லாஹ்விடம் கேட்கத் தடையேதும் இல்லை! கருத் தரித்தப் பின்னரும் - ஸ்கேனிங் மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என அறியாத நிலையிலிருந்தால் - விரும்பும் குழந்தையைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.
என் இறைவனே! என் வயிற்றில் உள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துவிட்டேன். எனவே என்னிடமிருந்து நீ (அதை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவாய். என இம்ரானின் மனைவி (பிராத்தித்துக்) கூறியதை (எண்ணிப்பாருங்கள்)
அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்தபோது ''என் இறைவனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்'' என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும் ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)ருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் (என்றார்) (அல்குர்ஆன் 3:35, 36)
மர்யம் (அலை) அவர்களின் தாயாருக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்து, அதை அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து நேர்ச்சை செய்கிறார் என்பதை மேல்கண்ட 3:36வது வசனத்திலிருந்து விளங்கலாம். எனவே, கருத்தரித்திருக்கும்போது அது ஆண் அல்லது பெண் குழந்தையாக இருக்கவேண்டும் என்று விரும்பலாம். அந்த விருப்பத்தை இறைவனிடம் கோரிக்கையாக வைக்கலாம்! அதன் பின்னர் இறைவன் விதித்தது நடக்கும்.
குழந்தைக்காக பிரார்த்திப்பது!
குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக பிரார்த்தனை எதுவும் இல்லை. குழந்தையை ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்க 3:36வது வசனம் கற்றுத்தருகிறது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் கருவில் வளரும் தமது குழந்தையின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கலாம். இறைவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையான அமல்களை முடித்த பின், குழந்தையின் சுபிட்சத்திற்காகவும், குழந்தையின் மூலம் கண்ணுக்குக் குளிர்ச்சியை வழங்கும்படியும் இறைவனிடம் முறையிடலாம்!
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் இப்ராஹீம் என அக்குழந்தைக்கு பெயரிட்டார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (அருள் வளம்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) (நூல் - புகாரி 5467)
(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'அனஸ் தங்களின் சேவகர். (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே, அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல் - புகாரி 6334, 6380)
குழந்தை பிறந்த அன்றே குழந்தைக்குப் பெயர் சூட்ட வழிகாட்டல், 3:36 குர்ஆன் வசனத்திலும், புகாரி 5467 வது அறிவிப்பிலும் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் தமக்கு ஆண் குழந்தை பிறந்த அன்றே அதற்கு இப்ராஹீம் என்று பெயரிட்டதாக வரும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது!
மேலும், தம்பதியர் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது ஓதிக் கொள்ளும் பிரார்த்தனை:
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, 'பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா' (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! எங்களை விட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - புகாரி 7396)
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
0 comments:
Post a Comment