வேலையில்லாத்  திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக  ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது  வெறுப்புறும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை  ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர்.  சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம்  நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை  தொடரத்தான் செய்கின்றன.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
2000  ஜனவரி - ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்  
2000 அக்டோபர் - முன்னாள் யுகோஸ்லாவியா:  செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல்  முறைகேடுகளுக்கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால்   தனது பதவியிலிருந்து விலகினார். பின்னர் ஹாகுவிலுள்ள  ஐ.நா வின் போர்  குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீர்ப்பு  வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார். 
2001 ஜனவரி - பிலிப்பைன்ஸ்:  அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும்  பரவிய லஞ்ச லாவண்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள்  நடந்த மக்கள்  புரட்சியால் தனது பதவியை இழந்தார்.
2001 டிசம்பர் - அர்ஜென்டினா:  அதிபர் பெர்னாண்டோ  டி  லரா, மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும்  அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில்   பதவி விலகி ஹெலிகாப்டரில்  தப்பிச்சென்றார். காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27  பேர்  உயிரிழந்தனர். 
2003 அக்டோபர் - பொலிவியா:  அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய  பேரத்தின் விளைவாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க  ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார். இந்தப் போராட்டத்தில் மக்கள் 65 பேர்  உயிரிழந்தனர்.
2003 நவம்பர் - ஜார்ஜியா: அதிபர்  எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30  ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலைத் தனது  கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில்  நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார்.  தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றது  செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில்  நாடாளுமன்றத்தில் நுழைந்தனர். 
2004  பெப்ரவரி  - ஹெய்தி:  அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு  மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச  நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில்  தஞ்சமடைந்தார். நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட  100 பேர்  உயிரிழந்தனர்.
2004 நவம்பர் - டிசம்பர் - உக்ரைன்:  அதிபர் விக்டர்  யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த  ரஷிய ஆதரவாளர்  விக்டர்  யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி  என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில்  மேற்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.
2005 மார்ச் - கிர்கிஸ்தான்:  அதிபர் அஸ்கர் அகயேவ் - அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த  முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை  இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார் 
2005 ஜூன் - பொலிவியா:  அதிபர் கார்லோஸ்  மேசா, தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர் கோன்சலோ  சன்செஸ் டி லோசடசாவைத் தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ்   மேசாவும் மக்கள் எதிர்ப்பால்  தனது பதவியை ராஜினாமா செய்தார் 
2010  ஏப்ரல் - கிர்கிஸ்தான்:  அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர்   அகயேவைத் தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ்,  மக்கள் புரட்சியால்  தனது ஆட்சியைத் துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில்   மக்கள்  87   பேர் உயிரிழந்தனர்.
2011 ஜனவரி - துனீசியா:  அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987  முதல் ஆட்சியில் இருந்த அதிபர்.   மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியைத்  துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில் 200 க்கும்  மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 
2011 பிப்ரவரி - எகிப்து:  அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி  25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற  மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்  பதவி விலகினார்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
0 comments:
Post a Comment